வியாழன், ஜனவரி 20, 2011

நியூசிலாந்து பயண அனுபவங்கள் - பாகம் 3

நியூசிலாந்து பற்றி எழுதும் பொழுது கண்டிப்பாக எழுத வேண்டிய ஒரு விஷயம் உண்டென்றால் அது - ஆடுகள். ஆமாம் நீங்கள் சரியாகதான் படித்தீர்கள். நியூசிலாந்தில் மனிதர்களை விட ஆடுகள் 9 மடங்கு அதிகம். எனவே நியூசிலாந்து மலைகளிலும், சம வெளிகளிலும் ஆடுகள் கூட்டம் கூட்டமாக மேய்ந்து திரிவதை பார்க்கலாம். இறைச்சிக்காகவும், ரோமத்திற்காகவும் அங்கு ஆடுகள்  வளர்க்கப்படுகின்றன. அதனால் கம்பளி உடைகள் மிகவும்

ஆடுகள்


மலிவாக வாங்கலாம் என்று எண்ணினேன். ஆனால் நல்ல ஸ்வெட்டர் விலையோ சில நூறு  அமெரிக்கன் டாலர்கள். எனவே கம்பளி உடைகள் வாங்க நினைப்பவர்கள் அதற்கேற்றார் போல் பணம் எடுத்து செல்வது நலம்.

சரி அடுத்த பயணம் எங்கே என்று அறிய ஆவலாக இருக்கிறீர்கள் தானே? நான் முன்பே கூறியது போல குயின்ஸ்டவுனில் இருந்து கிளம்பி சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள க்ளெநார்கி  என்ற இடத்திற்கு சென்றோம். நோமட் சபாரி என்ற நிறுவனம் வழியாக இந்த பயணத்தை ஏற்பாடு செய்திருந்தோம்.  மொத்தம் 8 பேர் கொண்ட எங்கள் பயண குழு பயணித்தது ஒரு ஜீப்பில். ஏன் என்றால் நாங்கள் பயணித்த பல பகுதிகளில் தார் சாலைகள் இல்லை. சில நேரங்களில் சிறு சிறு ஓடைகளில் இறங்கி பயணம் செய்ய நேர்ந்ததால் இந்த பயணத்திற்கு ஜீப்பே உகந்ததாக இருந்தது. பயணம் சென்ற சாலையின் ஒரு புறம் வாகடிப்பு ஏரி மற்றும் அதை சூழ்ந்த அழகிய மலை பிரதேசமும்  கண்ணுக்கு விருந்தளித்தது.  பல இடங்களில் இறங்கி வாகடிப்பு ஏரியின் பல்வேறு அழகிய காட்சிகளை புகைப்படங்களாக சிறை பிடித்துக்கொண்டே சென்றோம். இந்த இடத்தை விட இந்த இடம் மேலும் அழகாக உள்ளதா இல்லையோ என்று பட்டி மன்றம் நடத்தும் அளவிற்கு திரும்பும் வளைவுகளில் தோன்றிய இயற்கை   காட்சிகள் மனதை மயக்கியது.

வாகடிப்பு ஏரியின் மற்றொரு தோற்றம்

ஓட்டுனர் அழகான அந்த மலை மற்றும் வன பிரேதேசத்தில் "லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்" திரைப்படம் எடுக்கப்பட்ட பல்வேறு இடங்களை சுட்டிக் காட்டியவாறே வந்தார். 


                                                                    க்ளெநார்க்கி  


பின்னர் பயணத்தின் முத்தாய்ப்பாக தேநீரும் ரொட்டிகளும் வழங்கப்பட்டது.  அழகான அந்த இயற்கை காட்சிகளை ரசித்தவாறே உண்ட அந்த ரொட்டிகளின் தித்திப்பு இன்றும் நாக்கில் இனிக்கிறது.  அந்த அற்புதமான பயணம் அன்று மதியத்துடன் முடிவடைந்து மீண்டும் குயின்ஸ்டவுனை  அடைந்தோம்.  கோன்டேலா மூலமாக பயணித்து  சுமார் 1500  அடி உயரத்தில் இருந்து  குயின்ஸ்டவுன், ரிமார்கபில்ஸ் மலைகள், வாகடிப்பு ஏரி, செசில் சிகரம், வால்டர் சிகரம் ஆகியவற்றை கண்டு களித்தோம்.  இதோ உங்கள் பார்வைக்கு சில படங்கள்.


குயின்ஸ் டவுன் ஒரு பறவை பார்வை

குயின்ஸ் டவுன் மற்றொரு பார்வை
  அன்று மாலை முழுவதும் வாகடிப்பு ஏரியை ஒட்டிய தாவர பூங்காவில் செலவிட்டோம். பல விதமான அழகிய மரங்களும், பல்வேறு நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட அழகான மலர் வகைகளையும் கொண்ட அந்த பூங்கா கொள்ளை அழகுடன் திகழ்ந்தது. கரையில் அடிக்கடி தாள லயத்துடன் மோதும் அலைகளும், தண்ணீர் தாலாட்டும் படகுகளும், கரையை ஒட்டி அமைந்த அழகான சிறு வீடுகளும்  அமைதியான அந்த இடமும் மனதை  கொள்ளை கொண்டது. நேரம் போவதே தெரியாமல் அந்த அழகை ரசித்து கொண்டிருந்தோம்.

மறு நாள் காலையில் குயின்ஸ்டவுனை விட்டு விட்டு  கிட்டதட்ட 5  மணி நேர பயண  தொலைவில் உள்ள  பிரான்ஸ்ஜோசப் என்ற இடத்திற்கு புறப்பட்டோம். டன்ஸ்டன்  ஏரி, மபோரிக்கா ஏரி, வனாக்கா ஏரி, மவுண்ட் ஆஸ்பயரிங் தேசிய பூங்கா  ஆகியவற்றை வழியில் கண்டு களித்து விட்டு  பிரான்ஸ்ஜோசப்பை அடைந்தோம். பிரான்ஸ்ஜோசப் பனி பாறை மிகவும் பிரசித்தி வாய்ந்தது. அடுத்த நாள் இந்த பனி பாறை மேல் வழிகாட்டியின் உதவியோடு  நடந்து செல்வதாக திட்டமிட்டு இருந்தோம்.  ஆனால் நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பதாக நாங்கள் இறங்கியதில் இருந்து, 2 நாட்கள் கழித்து, நாங்கள் கிளம்பும் வரை விடாது கொட்டி தீர்த்தது மழை. மழையில் பனி பாறையில் நடக்க இயலாது என்பதால் அடுத்த நாள் பனி பாறையில் நடந்து சுற்றி பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சரி ஒரு நாள் முழுவதும் என்ன செய்வது என்று யோசித்தபோது கை கொடுத்தது உள்ளரங்க பனி பாறையேற்ற மையம்.

பனி பாறையில் ஏறும் சிலர்
கையில் இரண்டு கூர்மையான கோடரி கொண்டு பனிப்பாறையின் மேல்  பிடிப்பு ஏற்படுத்தி, பின்னர் கூர்மையான ஆணிகள் கொண்ட காலணியால் சிறிது தூரம் ஏறி, கோடரியை  மீண்டும் சிறிது மேலே செலுத்தி  பிடிப்பு ஏற்படுத்தி, மீண்டும் சிறிது தூரம் ஏறி, என்று மாறி மாறி செய்து சுமார் 30 அடி உயர பனி பறையின் உச்சி வரை ஏற வேண்டும். சொல்வதற்கும், பார்ப்பதற்கும் எளிதாக தோன்றிய இந்த செயல் மிகவும் கடினமாகவே இருந்தது. என்னால் பதினைந்து அடிகள் கூட ஏற முடியவில்லை. எனினும் முயற்சி செய்ததே மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது.

அடுத்த நாள்  காலை பிரான்ஸ் ஜோசப்பில் இருந்து கிளம்பி கிரேமௌத் என்றொரு ஊரை அடைந்தோம். கிரேமௌத்தில் இருந்து ட்ரான்ஸ்-சீனிக் எனப்படும் தடம் வழியாக ரயிலில் பயணித்து, கிரைஸ்ட்சர்ச்சை அடைவதாக திட்டம். ரயிலில் பெட்டிகளை ஏற்றி விட்டு எங்கள் பயண வகுப்பை கண்டுபிடித்து அமர்ந்தோம். ரயிலில் பயணிகள் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க ஒரு திறந்த பெட்டியும்,  பயணம் செய்வோர்  அமர்ந்து இளைப்பாற வசதியான இரு மூடிய பெட்டிகளும், மீண்டும் திறந்த பெட்டி என்று மாறி மாறி அமைந்து இருந்தது.

ரயிலில் அனுபவித்து சிலாகித்த காட்சிகள் சில புகைப்படங்களாக:

வைமாகாரிரி ஏரி  
டுசாக் வகை புற்கள்
மழை பொழிவினால் மலைகளில் தோன்றிப்   பாயும் சிறு அருவிகள், அம்மழையில் நனைந்து தலையாட்டும் டுசாக் புற்கள், மழையில் சலசலத்து ஓடும் சிறு ஓடைகள், அந்த ஓடைகள் கலக்கும் ஏரிகளில் இருந்து வரும் நீர் சிதறல்கள், அந்த நீர் சிதறல்கள் உண்டாக்கிய அழகிய புகை போன்ற  நீர் திரை, மழையில் நனைந்ததால் பொலிவு பெற்று திகழும் செடிகளும், மரங்களும் கண்களுக்கு விருந்தளித்தது. அந்தளவு இயற்கை அன்னை அழகுடனும், வனப்புடனும், புதுப்   பொலிவுடனும் திகழ்ந்ததை வேறங்கும் பார்த்ததில்லை என்று சொல்வேன். சுமார் நான்கரை   மணி நேரம் நீடித்த இந்த பயணம் அற்புதமான மற்றும் ஒரு இனிமையான நினைவு. அன்று இரவு கிரைஸ்ட்சர்ச்சை அடைந்து நாங்கள் தங்கும் விடுதிக்கு  சென்று ஓய்வெடுத்தோம்.

அடுத்த நாள் காலை கிரைஸ்ட்சர்ச்சில் இருந்து ட்ரான்ஸ்-கோஸ்டல் என்ற தடம் வழியாக ரயிலில் பயணித்து கைகௌரா என்ற இடத்திற்கு சென்றோம். ஜன்னல் மற்றும் மேற்கூரையில் கண்ணாடிகள் பதித்த அழகான ரயில். கிரைஸ்ட்சர்ச்சில் இருந்து கிளம்பி கேண்டபுரி சமவெளியை கடந்து பசிபிக் பெருங்கடல் ஒரு புறமும், அழகிய மலைகளையும், வனங்களையும்  மறு புறமும்  கொண்ட தடம் வழியே பயணித்து  கைகௌரா என்ற இடத்தை அடைந்தோம்.   கைகௌரா திமிங்கிலம் மற்றும் டால்பின் வகை மீன்களின் தலைநகரம். இந்த வகை மீன்களை அருகில் இருந்து பார்ப்பதற்கு ஏதுவாக பல நிறுவனங்கள் இங்கு பயணிகளுக்கு வழிகாட்டிகளுடன் கூடிய படகு சவாரியை ஏற்பாடு செய்து தருகின்றன.

நாங்கள் சென்ற  படகு சுமாராக முக்கால் மணி நேரம் பசிபிக் கடலில் பயணித்து திமிங்கிலம் இருப்பதாக சொல்லப்பட்ட கடற்பகுதியில்  காத்திருந்தது. சோனார் ஒலி அலை மூலமாக கடலில் எந்த இடத்தில் திமிங்கிலம் இருக்கலாம் என்று கணக்கிட்ட பின் அந்த இடத்திற்கு சென்று காத்திருக்கின்றனர். எந்த நேரமும் கடலில் இருந்து தோன்றலாம் என்பதால் குதூகலத்துடன் காத்திருந்தோம். எங்களை அதிக நேரம் காக்க வைக்காமல் சிறிது நேரத்திலேயே ஒரு திமிங்கிலம் தண்ணீருக்கு மேலே எழும்பியது. அழகான அந்த காட்சி உங்கள் பார்வைக்கு.




படகு சவாரி முடிந்ததும் மீண்டும் பேருந்து நிலையத்திற்கு வந்து கிரைஸ்ட்சர்ச் செல்லும் பேருந்தில் ஏறினோம்.  கிரைஸ்ட்சர்ச்சை அடைந்தவுடன் அங்கிருந்து ஒரு வாடகை டாக்ஸி மூலம் விமான நிலையத்தை அடைந்தோம்.  மனதிற்கு மிகவும் பிடித்த இந்த பயணம் முடிவுறுகிறதே என்று எண்ணியவாறே அங்கிருந்து வட அமெரிக்கா திரும்பினோம்.

பயணங்கள் நம்மை புதுப்பிக்க மட்டுமல்ல நம்மை சிந்திக்கவும் வைக்கும். ஆம், பயணம்/சுற்றுலா ஆகியன நம்முடைய அவசர வாழ்கையில் ஒரு வேகத்தடை.  நமக்கு மன மகிழ்ச்சியை அளிக்கும் அதே வேளையில் நாம் வாழும் இந்த பூமியை நமது வருங்கால சந்ததியினருக்கு எவ்வாறு விட்டு செல்ல போகிறோம் என்ற கேள்வியையும் நமக்குள் எழுப்பாமல்  விடுவதில்லை. இயற்கையுடன் இயைந்து வாழும் வாழ்கையை விட்டு வெகு தொலைவு வந்துவிட்டோம். எனினும் பயணங்கள் மீண்டும் நமது வேர்களை கண்டறியும் முயற்சி என்பதால் நாளையை பற்றிய நம்பிக்கையை அளிக்கிறது.

அது மட்டுமல்ல, நமது குடும்பத்தாருடனும், நண்பர்களுடனும் நாம் மேற்கொள்ளும் பயணங்கள்  காலத்தை கடந்தும் நம் நினைவில் நிற்கும். எனவே வருடத்திற்கு ஒரு முறையேனும் அருகில் உள்ள இடத்திற்கோ அல்லது வெளியூருக்கோ அல்லது வெளிநாட்டிற்கோ குடும்பத்துடன் சென்று வாருங்கள். இனிமையான நினைவுகளுக்கு சொந்தக்காரர் ஆகுங்கள்.









2 கருத்துகள்:

  1. ஹாய் மேடம்

    நியூசிலாந்து பயண தொடர் முழுவதும் வாசித்துவிட்டேன்.
    நிறைய தகவல்கள் தெரிஞ்சுக்க முடிந்தது.

    ஒரு வேளை நான் நியூசிலாந்துக்கு செல்வதாக இருந்தால் பெருசா இணையத்தில் தகவல்கள் தேட வேண்டிய அவசியம் இல்லாமல் அப்படியே உங்கலோட பயண திட்டத்தையே பயன்படுத்திக்கலாம்னு இருக்கேன்.
    அந்த அலவு தகவல்கள் இந்த தொடர் எனக்கு கொடுத்துடிச்சு.

    அருமையாக எழுதுகிறீர்கள்.
    தொடர்ந்து எழுதுங்கள் மேடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக இந்த பயண திட்டத்தை அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம். முடிந்தால் நியூஸிலாந்தின் நார்த் ஐலாந்தை உங்கள் பயண திட்டத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். தங்கள் வருகைக்கு நன்றி.

      நீக்கு